தீவிரவாதிகளின் உத்தரவின்பேரில் யாரோ சிலர் திரைக்கு பின்னால் இருந்து செயல்படுகிறார்கள்- இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

 

தீவிரவாதிகளின் உத்தரவின்பேரில் யாரோ சிலர் திரைக்கு பின்னால் இருந்து  செயல்படுகிறார்கள்- இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

காஷ்மீரில் அமைதியை குலைக்க தீவிரவாதிகளின் உத்தரவின்பேரில் யாரோ சிலர் திரைக்கு பின்னால் இருந்து செயல்படுகிறார்கள் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை செய்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக அடிக்கடி இந்திய நிலைகளை குறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல் நேற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய ராணுவம் ஆவேசமாக பதில் தாக்குதல் நடத்தியது.

பாதுகாப்பு பணியில் வீரர்கள்

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்களும், அதேஅளவு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 3 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் மோதலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தீவிரவாதிகள்

காஷ்மீரில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. ஆனால் அமைதியான சூழ்நிலையை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் மற்றும் அமைப்புகளின் உத்தரவின்பேரில் சில பேர் திரைக்கு பின்னால் இருந்து செயல்படுகிறார்கள். ஜம்மு அண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல், எல்லை பகுதி முழுவதிலும் தீவிரவாதிகள் ஊடுருவல் நடப்பதாக அடிக்கடி உளவு தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.