தீவிரவாதம், காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் தந்தை கவனித்து கொள்வார்- மோடியை புகழ்ந்த டிரம்ப்

 

தீவிரவாதம், காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் தந்தை கவனித்து கொள்வார்- மோடியை புகழ்ந்த டிரம்ப்

தீவிரவாத பிரச்னை மற்றும் காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் தந்தை கவனித்து கொள்வார் என பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு முன்னதாக டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதாவது: மோடி பிரதமராக வருவதற்கு முன்பு இந்தியா சச்சரவு மற்றும் கருத்து வேறுபாட்டின் இடமாக இருந்தது. பிரதமர் குடும்பத்தின் தந்தை போலவே தேசத்தையும் ஒன்றாக கொண்டு வந்தார்.

மோடி, டிரம்ப்

ஒரு தந்தை போலவே விஷயங்களை ஒன்றாக கொண்டு வந்தார். இப்போது எந்தவிதமாக கருத்து வேறுபாடுகளும் உங்களுக்கு கேட்காது. தீவிரவாத பிரச்னை மற்றும் காஷ்மீர் விவகாரத்தை உங்கள் பிரதமர் கவனித்து கொள்வார் என எனக்கு தெரியும். உங்களிடம் சிறந்த பிரதமர் உள்ளார் அவர் பிரச்சினை தீர்த்து விடுவார். அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அல் கொய்தா மற்றும் இதர தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி கொடுப்பதாக இம்ரான் கான் ஒப்புக்கொண்டதாக நான் கிடைக்கவில்லை. ஆனால் உங்கள் பிரதமர் அதனை பார்த்து கொள்வார் என எனக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் பண்ண தயார் என டிரம்ப் கூறியதால் மகிழ்ச்சியில் திளைத்து இருந்த பாகிஸ்தானுக்கு, அடுத்த சில மணி நேரத்தில் காஷ்மீர் மற்றும் தீவிரவாத பிரச்னையை மோடி கவனித்து கொள்வார் என டிரம்ப் மாற்றி பேசியது பாகிஸ்தானுக்கு பெரிய அடியானது.