தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் விவரம்

 

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் விவரம்

தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் 11,367 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பிற ஊர்களிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல 9,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், சென்னையின் எந்தெந்த பகுதிகளில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளன.

தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (MEPZ) இருந்து விக்கரவாண்டி பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் புறப்படும்.

அதேசமயம், மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள சமயத்தில், கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.