தீபாவளி நெருங்கும் வேளையில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

 

தீபாவளி நெருங்கும் வேளையில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மலேசிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் உள்நாட்டில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது.

நம் நாடு மலேசியாவிலிருந்து அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது. மலேசியாவுக்கு நம் நாடு 3வது மிகப்பெரிய பாமாயில் சந்தையாக விளங்குகிறது. இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதன் வாயிலாக அந்நாட்டுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உதாரணமாக கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நம் நாடு 39 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்துள்ளது. இதன் வாயிலாக மலேசியாவுக்கு சுமார் ரூ.14 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.

தாவர எண்ணெய்கள்

இந்நிலையில் மலேசிய பிரதமர் மஹதீர் முகமது கடந்த மாதம் ஐ.நா. சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசுகையில், இந்தியா அதிகாரதன்மையை காட்டி காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியிருந்தார். மலேசிய பிரதமரின் கருத்து மிகவும் வருத்தம் அளிப்பதாக நமது வெளியுறவு துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மலேசிய பிரதமரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதியை நிறுத்தும்படி தனது உறுப்பினர்களுக்கு இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மலேசிய பிரதமர் மஹதிர் முகமது

தீபாவளி நெருங்கும் வேளையில், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வது தடைப்பட்டால் உள்நாட்டில் சப்ளை பாதிக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் வேறுநாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதால் உள்நாட்டில் சப்ளை பாதிக்காது என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.