தீபாவளிக்கு போட்ட பட்டாசால் மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்

 

தீபாவளிக்கு போட்ட பட்டாசால் மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நேற்று மக்கள் பட்டாசு வெடித்ததால்தான் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தகவல்.

நம் நாட்டின் தலைநகரமான டெல்லி காற்ற மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மாநில எல்லை பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அடைகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் டெல்லிவாசிகள் தவித்து வருகின்றனர்.

காற்று மாசு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று அதிகம் மாசு அடையும் என்பதால் பாரம்பரிய வெடிகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் தீபாவளியன்று ஒட்டுமொத்தத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கடந்த ஆண்டே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு

இதனால் தீபாவளி சமயத்தில் டெல்லியில் மாசு பெரிய அளவில் மாசு அடையாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாலையில் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மேலும் டெல்லி பகுதி புகைமூட்டம் போல் காட்சி அளித்தது. சபார் (சிஸ்டம் ஆப் ஏர் குவாலிட்டி அண்டு வெதர் போர்காஸ்ட்டிங் அண்டு ரிசர்ச்) அறிக்கையின்படி, இன்று அதிகாலையில் தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததை இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.