தி.மு.க.வுக்கு தாவிய பாரிவேந்தர்: கமலை ஓரம் கட்டியது ஏன்?

 

தி.மு.க.வுக்கு தாவிய பாரிவேந்தர்: கமலை ஓரம் கட்டியது ஏன்?

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு  இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை: மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு  இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதுமட்டுமில்லாமல் வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடனும் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், ‘மக்களவை தேர்தலில் திமுகவிற்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும். தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஸ்டாலினால் தான் தரமுடியும். தற்போதைய அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இருக்கிறது. எனவே அந்தக் கூட்டணியை தற்போது தொடர முடியாது’ என்றார்.

முன்னதாக மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து  பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியது. இது குறித்து பேட்டியளித்துள்ள பாரிவேந்தர், ‘நானும் கமல் ஹாசனும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றாக செயல்படலாம்  என்று முடிவெடுத்திருந்தோம். கமல் ஹாசனிடம் எனது கட்சி கொள்கைகளைத் தெளிவாகக் கூறி விட்டேன். அவரும் நம் இருவருடையதும், ஒரே கட்சி, ஒரே கொள்கை, ஒரே லட்சியம் என்று கூறினார். எங்களது கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார். 

பாரிவேந்தரிடம் கூட்டணி குறித்து பேசியது உண்மை தான். ஆனால்  நம்மவர் தான் முடிவை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்த நிலையில் திடீரென்று பாரிவேந்தர் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.