திவால் நடவடிக்கையில் ஜெட் ஏர்வேஸ்…..கடனால் காணாமல் போகும் விமான சாம்ராஜ்யம்!

 

திவால் நடவடிக்கையில் ஜெட் ஏர்வேஸ்…..கடனால் காணாமல் போகும் விமான சாம்ராஜ்யம்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும்படி ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவை தேசிய நிறுவன தீர்ப்பாயம் ஏற்று கொண்டது. மேலும், 90 நாள் திவால் நடவடிக்கையை முடிக்கும்படியும் உத்தரவிட்டது. 

நரேஷ் கோயல்

 

நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1993ம் ஆண்டில் இந்தியா விமான போக்குவரத்து துறையில் அடியெடுத்து வைத்தது. சிறிய செடி போல் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சிறப்பான சேவை மூலம் அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கி செல்ல தொடங்கியது. நரேஷ் கோயல் மெல்ல மெல்ல விமான சேவையை விரிவுப்படுத்த தொடங்கினார். காலமும் அவருக்கு சாதகமாக இருந்தது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அசூர வளர்ச்சி கண்டது.

ஜெட் ஏர்வேஸ் விரிவாக்கத்துக்கு தேவையான நிதியை பங்குச் சந்தைகளில் பங்கு வெளியிட்டு திரட்ட நரேஷ் கோயல் முடிவு செய்தார். இதனையடுத்து 2005 ஏப்ரல் 26ம் தேதி பங்குச் சந்தைகளில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் வெளியிடப்பட்டன. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.1,100ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று முதலீட்டாளர்கள் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை போட்டி  போட்டு வாங்கினர். அதனால் அன்று வர்த்தகத்தின் இடையே பங்கின் விலை ரூ.1,379க்கு விற்பனையானது. அதேசமயம் அதன் பிறகு இதுவரை அந்த பங்கின் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் நேரம் ஒரே மாதிரி இருக்காது ஏதாவது ஒரு சமயத்துல கெட்ட நேரம் வரும்ன்னு பலரும் சொல்வதை நாம கேட்டு இருப்போம். ஜெட் ஏர்வேஸ்க்கு அந்த கெட்ட நேரம் 2008ம் ஆண்டு வந்தது. உலகையே உலுக்கிய சர்வதேச பொருளாதார மந்தநிலை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. அதுமுதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனை சமாளிக்க நிறுவனம் கடன் வாங்கியது.

ஸ்டேட் வங்கி

அப்படி தட்டு தடுமாறி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை நடத்தி வந்தது. ஆனால் 2015ம் ஆண்டு முதல் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால் பல வங்கிகளிடம் கடனை வாங்கி அந்த நிறுவனம் காலத்தை ஓட்டியது. ஒரு கட்டத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் கொடுத்த கடனை திருப்பி கேட்க தொடங்கின. விமானமே கடனில் பறக்கு அப்புறம் எப்படி அந்த நிறுவனத்தால் கடனை திருப்பி கொடுக்க முடியும்.

கடன் கொடுத்த வங்கிகள் ஸ்டேட் வங்கி தலைமையில் கூடி ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை தங்கள் கையில் எடுத்தனர். ஸ்டேட் வங்கி ஜெட் ஏர்வேஸ் பங்குகளை விற்று கடனை வசூல் செய்து விடலாம் என்று அதற்கான வேலையில் இறங்கியது. அது ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஸ்டேட் வங்கி  மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று தீர்ப்பாயம் விசாரணை செய்தது.

நீதிபதிகள் வி.பி. சிங் மற்றும் ரவிகுமார் துரைசாமி அடங்கிய தீர்ப்பாய அமர்வு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு ஈடுபடுத்த உத்தரவிட்டது. மேலும் 90 நாட்களில் திவால் நடவடிக்கைகளை முடிக்கவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.