தில்லு இருந்தால் பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவோம் என சொல்லுங்கள்! காங்கிரசை விளாசிய பிரதமர் மோடி…

 

தில்லு இருந்தால் பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவோம் என சொல்லுங்கள்! காங்கிரசை விளாசிய பிரதமர் மோடி…

காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இருந்தால் அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவோம் என நாட்டின் முன் அறிவிக்கட்டும் என அக்கட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ்

ஐார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வரும் 20ம் தேதியன்று 15 தொகுதிகளுக்கு தேர்தல் அங்கு நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 

சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு தைரியம் இருந்தால் தேசத்தின் முன், அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவோம் என சொல்லட்டும். அப்படி அவர்கள் சொன்னால் நாடு அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும். ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக்கில் மீண்டும் சிறப்பு சட்டப்பிரிவு 370 கொண்டு வருவோம், முத்தலாக் சட்டத்தை தடை செய்வோம் என தில்லு இருந்தால் காங்கிரஸ் சொல்லட்டும். தைரியம் இருந்தால் சிறப்பு சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என தேசத்தின் முன் அறிவியுங்கள் என உங்களுக்கு (காங்கிரஸ்) சவால் விடுகிறேன்.  நீங்கள் மக்களை தவறாக வழி நடத்துகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.