தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்; பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

 

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்; பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நரிலா பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவுக்கு  சென்று கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் கையில் தடியுடன் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அவர்கள் அவரை சந்திக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.

ஆனால், கெஜ்ரிவாலின் கார் நிற்காமல் சென்றதால் அதிருப்தியடைந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தடிகளால் அவரது காரை சரமாரியாக தாக்கினர். மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் கெஜ்ரிவாலின் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த தாக்குதலில் அரவிந்த் கெஜ்ரிவால் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இத் தாக்குதல் குறித்து தில்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், தாக்குதல் நடத்திய கூட்டத்தில் இருந்த சிலர் பாஜக கொடியை கைகளில் ஏந்தி வந்ததால், இந்த தாக்குதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.