திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

 

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரி யார் என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரி யார் என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வார நாட்களில்  4 காட்சிகளும்,விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் 6 காட்சிகள் வரை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற அந்த வழக்கின் விசாரணையின் போது, விடுமுறை நாட்களில் 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கவில்லை என்பதற்கு என்ன சான்றுள்ளது என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், முறையான சான்றுகள் இல்லாமல், இது தொடர்புடைய அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்காமல்  மனு தாக்கல் செய்ததற்தாக மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரி யார் என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.