திருவாரூர் யாருக்கு? கருத்துக்கணிப்பால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் டரியல்

 

திருவாரூர் யாருக்கு? கருத்துக்கணிப்பால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் டரியல்

திருவாரூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் எதிர்க்கட்சியினரை டரியல் ஆக்கியுள்ளது

சென்னை: திருவாரூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் எதிர்க்கட்சியினரை டரியல் ஆக்கியுள்ளது.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் தொகுதி கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேசமயம் எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக திருவாரூர் தேர்தல் பார்க்கப்படுகிறது. திருவாரூரை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அதிமுகவும், அமமுகவும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பு திருவாரூர் தொகுதியில் நடத்திய கருத்துக்கணிப்பில், டிடிவி தினகரனுக்கே அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் இரண்டாம் இடம் திமுக-வுக்கும், மூன்றாம் இடம் அதிமுக-வுக்கும் கிடைத்துள்ளது.

கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. போதிய உதவிகளை அரசு செய்து கொடுக்காததால் மக்கள் ஆளும் அதிமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஸ்டாலினோ ஒரே ஒரு முறை மட்டும் சென்று மக்களை சந்தித்து வந்துள்ளார். ஆனால், தினகரனோ அவ்வப்போது சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். இதனால் டிடிவி தினகரன் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை சரியாக பயன்படுத்தினால், அவருக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.