திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு ஆப்படிக்கும்:கெத்து காட்டும் தினகரன்

 

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு ஆப்படிக்கும்:கெத்து காட்டும் தினகரன்

மதுரை: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் களப்பணியை ஆரம்பித்துள்ளன. முக்கியமாக திருவாரூரை அனைத்து கட்சிகளும் குறி வைத்துள்ளன. அரசியல் ஆளுமை கருணாநிதியின் சொந்த தொகுதியை எந்த கட்சி கைப்பற்றினாலும் அந்த கட்சிக்கு அது ஒரு உற்சாக டானிக்கை சர்வ நிச்சயமாக கொடுக்கும். அதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வியூகத்திலும், செயல்பாட்டிலும் இருந்தாலும் திருவாரூரை எப்படியாது கைப்பற்றி தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவாக நினைத்திருக்கிறார் தினகரன் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

திருவாரூரை கைப்பற்ற முடியாவிட்டாலும் 2-வது இடத்திற்காவது வந்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் தினகரன்.இதற்காக அவர் தற்போதே நிர்வாகிகளை சந்தித்து பேச ஆரம்பித்திருக்கிறார். எனவே திருவாரூர் இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் நிலவரங்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் துரோக ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். ஒரு நோயாளி தனது இறுதிக்கட்டத்தில் நோய் முற்றி எப்படி இறப்பாரோ அது போல இந்த ஆட்சியும் நோயாளியின் இறுதிக் கட்டத்தை போல உள்ளது. இது விரைவில் முடிவுக்கு வரும். இந்த துரோக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் இருக்கும்.திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் எங்களது வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. மற்ற கட்சிகள் 2-வது இடத்திற்குத்தான் போட்டியிட வேண்டும் என்றார்.