திருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

 

திருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 10-ம் தேதி, வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 11-ம் தேதி நடைபெற்று, இறுதி பட்டியல் 14-ம் தேதி வெளியிடப்படும்.

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

இடைத்தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது. அதிமுக சார்பில் போட்டியிட 52 பேரும், திமுக சார்பில் போட்டியிட 30-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

திமுக-வை பொறுத்தவரை அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி பெயர்களை முன்மொழிந்தும் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிகமான விருப்ப மனுக்கள் பூண்டி கலைவாணன் பெயரில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திமுக சார்பில் பூண்டி கலைவாணன், அதிமுக சார்பில் ஏற்கெனவே போட்டியிட்ட பன்னீர்செல்வம் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், அமமுக சார்பில் குடவாசல் ராஜேந்திரன் அல்லது திருவாரூர் தொகுதி மாவட்ட செயலாளர் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.