திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்து போட்டி: சீமான் அதிரடி அறிவிப்பு

 

திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்து போட்டி: சீமான் அதிரடி அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியின் உறுப்பினராக இருந்த அதிமுகவின் ஏ.கே.போஸும் காலமாகியுள்ளதையடுத்து, அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதோடு சேர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியும் காலியாக இருப்பதால் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதி கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேசமயம் திருவாரூரை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அதிமுகவும், அமமுகவும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என கருதப்படுகிறது. திமுக-வுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.