திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம்

 

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததையடுத்து காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு வருகின்ற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக திமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தன. ஆனால், அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில், கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3-ம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார் எனக் கூறி திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்த போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசோடு கலந்து பேசி முடிவெடுத்திருந்தால் ரத்து என்ற நிலை ஏற்பட்டிருக்காது. ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பது கண்டனத்திற்குரியது.

மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்று கேட்கவில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை. புயல் பாதிப்பை அறியாமல் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.