திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்?

 

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்?

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்ற அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்ற அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் மறைவுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாலும் திருவாரூர் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இத்தேர்தலில், திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேசமயம், அதிமுக, திமுக, அமமுக கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், திருவாரூர் தொகுதியில் களமிறங்கவுள்ள வேட்பாளரின் பெயரை தினகரனின் அமமுக கட்சி மட்டுமே அறிவித்துள்ளது, திமுக சார்பில் பூண்டி கலைவாணன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 52பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். விருப்ப மனு அளித்தவர்களில் 7 பேரைத் தவிர 45 பேர் பேரிடம் சுமார் 2 மணி நேரம் நேர்காணல் நடந்தது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பம் என்றார்.

தொடர்ந்து பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? என கேள்வி எழுப்பினர். அத்துடன், எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்க அதிமுக அச்சப்படாது எனவும் பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.