திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி

 

திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி

திருவாரூரில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

புதுடெல்லி: திருவாரூரில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்செய்யப்பட்டுள்ளதால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.  இந்த சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் அரசு நிர்வாகம் தேர்தலில்தான் கவனம் செலுத்தும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடருவதற்கு தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து தமிழக தலைமை செயலாளர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
 
அதற்கு தற்போது பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், திருவாருரில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது என்றும் தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.