திருப்பரங்குன்றம் வழக்கு வாபஸ் – ஸ்டாலின் வகுக்கும் பதில் வியூகம்

 

திருப்பரங்குன்றம் வழக்கு வாபஸ் – ஸ்டாலின் வகுக்கும் பதில் வியூகம்

திருப்பரங்குன்றம் தொடர்பான தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக உறுப்பினர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். ஆனால், இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

இடைத்தேர்தல்

இந்த தேர்தல் நடந்த போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை வைத்து இருந்தார். இதனால் இது ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் பெறப்பட்ட கையெழுத்து என்று சரவணன் வழக்குத் தொடுத்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து இந்த வழக்கு தீர்ப்பிற்காக நிலுவையில் இருக்கிறது.

lok sabha election

இதனால் தற்போது திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

வழக்கு வாபஸ் 

இந்த நிலையில் இன்று காலை, இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் சரவணன் மனுதாக்கல் செய்தார். அவரின் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தற்போது புதிய திருப்பமாக திருப்பரங்குன்றம் வழக்கைத் திரும்ப பெறுகிறேன் என்று திமுக சரவணன் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் சரவணன்

அவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் எழுதிய கடிதத்தில், திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன். வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் தள்ளிப்போகிறது. தொகுதி நலன் கருதி வழக்கை திரும்ப பெறுகிறேன். எனது வழக்கறிஞர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு அளித்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தள்ளிப் போகக் கூடாது 

வழக்கு காரணமாக தேர்தல் தள்ளிப்போக கூடாது. வழக்கு காரணமாக தேர்தல் நடத்த கூடாது என்று எங்கும் நீதிமன்றம் கூறவில்லை. இருந்தாலும் என் வழக்கை திரும்ப பெறுகிறேன். அதனால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்த வேண்டும் என்று சரவணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ  ஏ.கே போஸ் விபத்தில் மரணமடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

ஏ .கே.போஸ்