திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறார் சரவணன்!

 

திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறார் சரவணன்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக சரவணன் தெரிவித்துள்ளார்

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக சரவணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

 இதையடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கின் நிலை குறித்தும், தொகுதி மக்களின் நலன் கருதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த வழக்கை தொடர்ந்திருக்கும் சரவணன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் அதிகாரிக்கும் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தான் திரும்ப பெறுவதாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சீனிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பதவியேற்பதற்கு முன்னரே சீனிவேல் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு 2016-ஆம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் மற்றும் திமுக சார்பில் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இடைத் தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இடைத் தேர்தலின் போது அதிமுவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே, அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸூக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரும் படிவத்தில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை சந்தேகத்திற்குரியது என  சரவணன் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில், இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை