திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; திரளான பக்தர்கள் வழிபாடு

 

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; திரளான பக்தர்கள் வழிபாடு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது.

தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம். நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் கடைசியாக கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.1 கோடி செலவில் இந்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 8 கால யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை, இரவு 2 மற்றும் 3-ம் கால பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை மற்றும் இரவில் 4 மற்றும் 5-ம் கால பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, இன்று காலை 8-ம் காலயாக பூஜை நடைபெற்றது. யாக குண்டங்களில் இருந்து புனிதநீர் கோபுரக் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

கும்பாபிஷேக விழாவில் தமிழகம், புதுச்சேரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.