திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நேற்று இரவு நடைபெற்றது.

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நேற்று இரவு நடைபெற்றது.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு நேற்று இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்தனர் .

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது அதனையடுத்து சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

tiruchendur

இந்நிலையில், நேற்று இரவு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பிறகு, காலை 5 மணியளவில் தெய்வானை அம்பாள் தபசுக் காட்சிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

tiruchendur

முருகன் தெய்வானை ஆகியோர் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. அதன் பிறகு இருவரும் ரத ஊர்வலம் வந்தபிறகு கோயில் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

திருக்கல்யாணம் முடிந்த பிறகு அடுத்த மூன்று நாட்களும் முருகன் தெய்வானை தம்பதிகள் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்கள். கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான 19-ம் தேதியன்று முருகன் தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.அப்போது, பக்தர்கள் முருகப் பெருமானைப் போற்றியும், போரில் வென்ற வேலவரின் வெப்பம் தணிக்கவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றிக் கொண்டாடுவார்கள்.