திருச்சானூர் கோயிலில் பத்மாவதி தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதிஉலா

 

திருச்சானூர் கோயிலில் பத்மாவதி தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதிஉலா

திருச்சானூர் என்று அழைக்கப்படும் அலமேலுமங்கா புரம் பத்மாவதி தாயார் கோயிலில் தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி :

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பண நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதனையடுத்து 3 ஆம் தேதி குங்குமார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.

tiruchanur

 டிசம்பர் 4 ஆம் தேதி  காலை 8.30 மணிக்கு கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டது.

பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் தினமும் பத்மாவதி தாயார் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி இன்று தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது . பத்மாவதி தாயார் வீதி உலாவின் போது மாடவீதியை சுற்றி காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

மேலும் கோயில் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய படி வீதி உலாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆந்திரம், தெலங்கானா ,தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

tiruchanur

இதனை அடுத்து இன்று மாலை அனுமந்த வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

அதனையடுத்து நாளை முத்துப்பல்லக்கு மற்றும் கஜ வாகனத்திலும் ஞாயிற்றுக்கிழமை சர்வ பூபால வாகனம் மற்றும் சிகர  நிகழ்ச்சியான கருட சேவையும் நடைபெறுகிறது. 

அதனை தொடர்ந்து திங்கட்கிழமை சூரியபிரபை வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனத்திலும் அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை திருத்தேர் மற்றும் குதிரை வாகனத்திலும் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கிறார்.

அதன் பின்னர் புதன்கிழமை சக்கரஸ்நானம் நடைபெறுகிறது . அதனை தொடர்ந்து வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.