திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை,சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா!

 

திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை,சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா!

திருச்சானூரில் நடந்து வரும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திருப்பதி: 

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிசம்பர் 4 ஆம் தேதி  கொடி ஏற்றத்துடன் பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது.

thiruchaanur

பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் தினமும் பத்மாவதி தாயார் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், திரிவிக்ரமன் அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நண்பகல் 12 மணியில் இருந்து 2.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதனையடுத்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

thiruchaanur

மேலும் கோயில் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய படி வீதி உலாவில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில்ஆந்திரா,தெலங்கானா,தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் விழாவினை கண்டு களித்தனர்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று காலை 8.15 மணியளவில் தேரோட்டமும், அதனையடுத்து இரவு குதிரை வாகன வீதிஉலாவும் நடைபெறுகிறது.

இதனைஅடுத்து நாளை சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. அதனையடுத்து வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.