தியேட்டர் முன்பு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போராட்டம்! – ‘சர்கார்’ காட்சி ரத்து

 

தியேட்டர் முன்பு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போராட்டம்! – ‘சர்கார்’ காட்சி ரத்து

சர்கார் படத்தை தடை செய்யக் கோரி தியேட்டர் முன்பு அதிமுக எல்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போராட்டம் நடத்தியதையடுத்து, பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை: சர்கார் படத்தை தடை செய்யக் கோரி தியேட்டர் முன்பு அதிமுக எல்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போராட்டம் நடத்தியதையடுத்து, பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் கோமலவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க-வினர் மதுரையில் அமைந்துள்ள சினிப்பிரியா திரையரங்கை முற்றுகையிட்டனர்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, “சர்கார் திரைப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் அ.தி.மு.க அரசை கேலிசெய்யும் விதமாக இருக்கிறது. அ.தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவின் இயற்பெயரைப் பயன்படுத்தி அவரின் பெயருக்கு பங்கம்விளைக்கும் விதமாகவும் காட்சியமைத்துள்ளனர். எனவே, இது போன்ற காட்சிகளை அமைத்து, மக்களிடத்தில் அ.தி.மு.க அரசு மீது அவதூறுகளைப் பரப்பும் விதமான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை திரையிடவிடமாட்டோம். இதுகுறித்து மதுரையில் உள்ள திரையரங்கங்களின் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

rajan chellappa

இதனிடையே, சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா ஆகிய திரையரங்கில் இன்று 2.30 மணிக்கு தொடங்க இருந்த பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் சர்கார் திரையிடப்படும் என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.