தியானம் செய்வதற்காக வெளிநாட்டுக்கு பறந்த ராகுல் காந்தி! காங்கிரஸ் மானத்தை வாங்கும் பா.ஜ.க.

 

தியானம் செய்வதற்காக வெளிநாட்டுக்கு பறந்த ராகுல் காந்தி! காங்கிரஸ் மானத்தை வாங்கும் பா.ஜ.க.

தியானம் செய்தவற்காக ராகுல் காந்தி வெளிநாடுக்கு சென்று இருப்பதை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பின்மை மற்றும் தொழில்துறை நலிவடைந்து வருவது ஆகியவற்றை கண்டித்து நாளை முதல் 8ம் தேதி நாடு முழுவதுமாக 35 பத்திரிகையாளர்கள் சந்திப்பை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. மேலும், நவம்பர் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் பா.ஜ.க. அரசின் தோல்விகளை வெளிப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டங்களை அந்த கட்சி நடத்த உள்ளது.

அமித் மால்வியா

இந்த பெரிய முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் வேளையில், அந்த கட்சியின் பிரபல தலைவர் ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி சென்று விட்டார். இந்நிலையில், காங்கிரஸ் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ராகுல் காந்தி கடந்த காலங்களில் தியான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது அதில் உள்ளார். ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு திட்டம் அனைத்தும் அவர்தான் வடிவமைத்தது மற்றும் அவருடன் கலந்தாலோசித்தது என தெரிவித்தார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தியானத்துக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்ற காங்கிரஸ் விளக்கத்தை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா இது குறித்து கூறுகையில், தியானத்துக்கான வளமான பாரம்பரிய கொண்ட முன்னணி நாடு இந்தியா. ஆனால் ராகுல் காந்தி தியானத்துக்காக அடிக்கடி முரண்பாடான இடங்களுக்கு பறக்கிறார். காங்கிரஸ் ஏன் அவரது பயணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக அவர் மிகவும் பாதுகாக்கப்பட்ட தலைவர் என தெரிவித்தார்.