திமுக-வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் விளக்கம்

 

திமுக-வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் விளக்கம்

திமுக-வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கவுள்ளது என்று வெளியான தகவல் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்

சென்னை: திமுக-வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கவுள்ளது என்று வெளியான தகவல் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வரும் அவர், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம், அவர் தனித்து களம் காண்பாரா? அல்லது கூட்டணி வைத்து களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அண்மையில் கமல் சந்தித்ததால் காங்கிரஸ் உடன் அக்கட்சி கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி, கமல் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ரிஸ்க்கை காங்கிரஸ் எடுக்குமா? எனவும் கேள்வி எழுப்பினர் அரசியல் நோக்கர்கள்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையும் என கமல் கூறியது விவாத பொருளாகவும் மாறியது. இதனிடையே, திமுக-வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி என வெளியான செய்தி வதந்தி என கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து  நிற்போம். நாளைநமதே ” என பதிவிட்டுள்ளார்.