திமுக கூட்டணியிலிருந்து விலகும் காங்கிரஸ்? வெளியான அறிக்கையால் பதறிப்போன அழகிரி

 

திமுக கூட்டணியிலிருந்து விலகும் காங்கிரஸ்? வெளியான அறிக்கையால் பதறிப்போன அழகிரி

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக வெளியான  அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:  திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக வெளியான  அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rahul

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியானது கடந்த சட்டப்பேரவை தேர்தலிலிருந்தே  உள்ளது. கருணாநிதி காலத்திலிருந்தே திமுக -காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது. அதனால் காங்கிரஸ் கூட்டணி என்றால் அது திமுகவுடன் தான் என்று சொல்லும் அளவிற்கு இந்த கட்சிகளுக்கு இடையேயான உறவு உள்ளது. அதனால் தான் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் திமுக தலைவர் கருணாநிதி சிலையைச் சோனியா காந்தி திறந்து வைத்தார். அதே கூட்டத்தில் அடுத்த பிரதமர் வேட்பாளர்  ராகுல் காந்தி என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்தார். 

dmk

இந்நிலையில்  திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டதாக  வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வேகமாகப் பரவியது. அதில், ‘திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் பெரிய கட்சியாக அமைக்க சந்திரசேகர ராவ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து பேசி வருவதால் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இது குறித்து  தமிழக காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், ‘போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது.  அதை யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். இதைப் போன்ற போலி செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பதிவிடப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து  சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு இணைத்தலைவர் ஷாநவாஸ்  இந்த போலியான அறிக்கை குறித்து புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.