திமுக அதிமுகவுக்கு மாற்று விஜயகாந்த். விஜயகாந்த்துக்கு மாற்று கமல்?

 

திமுக அதிமுகவுக்கு மாற்று விஜயகாந்த். விஜயகாந்த்துக்கு மாற்று கமல்?

மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, திருப்பெரும்புதூர், திருவள்ளூர், ஆகிய இடங்களில் மூன்றாவது இடத்தை கமல் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். சில இடங்களில் இரட்டை இலக்க விழுக்காட்டில் வாக்குகள் பெற்றுள்ளது தேர்தல் முடிவுகளை உற்றுநோக்குபவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

இரு திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று யார் வந்தாலும், மன்னிக்க எந்த நடிகர் வந்தாலும், தமிழக மக்கள் அவர்களை பரிசீலிக்க தயாராக இருப்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. கட்சி ஆரம்பித்த முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒற்றை ஆளாக வென்ற விஜயகாந்த் கட்சி பெற்ற அத்தேர்தலில் பெற்ற‌ மொத்த வாக்குகள் 8 விழுக்காட்டுக்கும் சற்று கூடுதல். அடுத்துவந்த நாடாளுமன்ற தேர்தலில், அதனை 10 விழுக்காடாக மாற்றிய, விஜயகாந்த், அதன்பின் கூட்டணி என்னும் மாயவலையில் சிக்கி கடைசிவரை எழ முடியாமல் வீழ்ந்தது கண்கூடு.

இப்போது,மீண்டும் ஒரு நடிகரின் கட்சிக்கு மக்கள் தங்கள் கவனத்தை தந்திருக்கிறார்கள். கமலின் மக்கள் நீதி மய்யம் ஆச்சர்யப்படும்வகையில், இரவு 8 மணி நிலவரப்படி 13 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கிரேட்டர் சென்னையை கணக்கில்கொண்டால், மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, திருப்பெரும்புதூர், திருவள்ளூர், ஆகிய இடங்களில் மூன்றாவது இடத்தை கமல் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். சில இடங்களில் இரட்டை இலக்க விழுக்காட்டில் வாக்குகள் பெற்றுள்ளது தேர்தல் முடிவுகளை உற்றுநோக்குபவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

Kamal securing 3rd place

இதுபோக, கொங்கு மண்டலத்திலும் தங்கள் இருப்பை வலுவாக காட்டியுள்ளது மக்கள் நீதி மய்யம். கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய கொங்கு பகுதிகள் மூன்றாவது இடத்தைப் பிடித்த மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பல இடங்களில் பாஜக+அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். இதுபோக, புதுச்சேரி மக்களவை தொகுதியிலும், மதுரையிலும்கூட மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இரண்டாம்கட்ட நகரங்கள் மற்றும் ஊரகங்களில் கமலுக்கு போதிய வரவேற்பு இல்லாவிட்டாலும், மாநகரங்களில் கமலுக்கு குறிப்பிடும்படியான ஆதரவு இருப்பதை மறுப்பதற்கில்லை.