திமுகவில் சேர்கிறேனா? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

 

திமுகவில் சேர்கிறேனா? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

திமுகவில் இணைகிறேனா இல்லையா என்பது குறித்து அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: திமுகவில் இணைகிறேனா இல்லையா என்பது குறித்து அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அக்கட்சியில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என பலரும் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சர் தங்கமணி, டிடிவி தினகரனின் மனசாட்சி என கூறப்படும் தங்க தமிழ்ச்செல்வனையும், கதிர்காமுவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு யோசிக்க நேரம் வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், அதிமுகவில் சேர்ந்தால் தனக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது என உணர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் வரும் 27-ம் தேதி திமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முதல் உலா வரும் இந்த தகவல்கள்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது.

இந்நிலையில் அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலக இருக்கிறார் என்ற தகவல் குறித்து அவரது பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் பக்கத்தில், நான் திமுகவில் சேர திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வதந்தியை பரப்பி வருகிறது இதை யாரும் நம்ப வேண்டாம்  நான் என்றும் சசிகலாவின் ஆணைக்கிணங்க டிடிவி தினகரன் வழியில் என் பயணம் தொடரும் துரோகத்தை  வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி என பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.