‘திமுகவின் வெற்றிக்கு ஊண் உறக்கமின்றி விசிக பாடுபடும்’ – திருமா அறிவிப்பு

 

‘திமுகவின் வெற்றிக்கு ஊண் உறக்கமின்றி விசிக பாடுபடும்’ – திருமா அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு ஊண் உறக்கமின்றி விசிக பாடுபடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு ஊண் உறக்கமின்றி விசிக பாடுபடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரை மகத்தான அளவில் வெற்றிபெறச் செய்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பணியாற்றும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய இருபது தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடாது, திமுக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடும்’ என ஏற்கனவே நாம் அறிவித்திருந்தோம். திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றே காட்சி ஊடகங்களின் மூலமாக எமது ஆதரவைத் தெரிவித்திருந்தோம். அங்கு சமத்துவப் பெரியார் கலைஞர் பெற்ற வாக்குகளைப் போல கூடுதலான வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து விதங்களிலும் பாடுபடும்.

இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்காமல் திருவாரூருக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சதியை முறியடித்து திமுகவை வெற்றிபெறச் செய்வதன் மூலமே சனாதன சக்திகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் பாடம் புகட்ட முடியும். எனவே, இந்த இடைத்தேர்தலை மிகுந்த முக்கியத்துவத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பார்க்கிறது.

நீண்ட காலமாக தனிதொகுதியாக இருந்த திருவாரூர் தொகுதியில் 36% தலித் வாக்காளர்கள் உள்ளனர். சனாதன சக்திகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும் தலித் மக்கள் இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற அணிக்கு தலைமை ஏற்றிருக்கும் திமுகவுக்கு மிகப்பெரும் ஆதரவை நல்குவார்கள் என்பது 
உறுதி.

திருவாரூர் தொகுதியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வொருவரும் இன்றிலிருந்தே தேர்தல் பணியைத் துவக்க வேண்டும் என்றும், திமுக வேட்பாளரின் வெற்றிக்கு ஊண் உறக்கமின்றிப் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.