தித்லி புயலுக்கு ஆந்திராவில் 8 பேர் பலி

 

தித்லி புயலுக்கு ஆந்திராவில் 8 பேர் பலி

ஒடிசாவின் கோபால்பூர் – வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்த தித்லி புயலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

அமராவதி: ஒடிசாவின் கோபால்பூர் – வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்த தித்லி புயலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருந்த தித்லி புயல், மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காலை ஒடிசாவின் கோபால்பூர் – வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது.

இதையடுத்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிகப் பலத்த மழை, மிதமிஞ்சிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக, ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மற்றும் ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், குர்தா, நயாகார் மற்றும் புரி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், தித்லி புயலானது மணிக்கு, 14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் மின் இணைப்பு மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.