திக்விஜய் சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம்….. மத்திய பிரதேச காங்கிரசின் முயற்சி தோல்வி…..

 

திக்விஜய் சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம்….. மத்திய பிரதேச காங்கிரசின் முயற்சி தோல்வி…..

பெங்களூரு ஹோட்டலில் இருக்கும் மத்திய பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரையும் சந்தித்து பேச தன்னை அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தாக்கல் செய்த மனுவை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம்  ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். மேலும் தங்களது ராஜினாமா கடிதத்தையும் பா.ஜ.க. தலைவர்கள் வாயிலாக சபாநாயகரிடம் கொடுத்தனர். இதனையடுத்து முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்து கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

இந்நிலையில், முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியது. மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டான்டனும் மார்ச் 16ம் தேதி (கடந்த திங்கட்கிழமை) சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் கமல் நாத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் சபாநாயகர் கொரோனா வைரஸை காரணம் காட்டி மார்ச் 26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைத்தார்.

திக்விஜய சிங்

அடுத்து சட்டப்பேரவை கூடுவதற்குள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்து விடலாம் என காங்கிரஸ் தலைவர்கள் கணக்கு போட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் நேற்று காலையில் பெங்களூருக்கு விமானத்தில் வந்தார். பின் அங்கிருந்து நேராக மத்திய பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ரமதா ஹோட்டலுக்கு வந்தார். பின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை. இதனையடுத்து உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைத்தனர்.

கர்நாடக உயர் நீதிமன்றம்

இதற்கிடையே, ரமதா ஹோட்டலில் தங்கியிருக்கும்  மத்திய பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரையும் சந்தித்து பேச தன்னை அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த  நீதிமன்றம் திக்விஜய் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க முயன்ற காங்கிரசின் முதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.