தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி: அதிகாரிகள் கண்ணில் பிடிப்பட்டது எப்படி?

 

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி: அதிகாரிகள் கண்ணில் பிடிப்பட்டது எப்படி?

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டியை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை: தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டியை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்  சோதனை செய்தனர். அப்போது தாய்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்த சென்னையை சேர்ந்த காஜாமொய்தீன் என்பவரது உடைமைகளைச் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்த ஒரு பிளாஸ்டிக் கூடைக்குள் உயிருள்ள பொருள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

உடனே சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பிளாஸ்டிக் கூடையை திறந்து பார்த்தபோது அதில் 1 மாத சிறுத்தை குட்டி வைக்கப்பட்டு அதன்மேல் துணியை கொண்டு மூடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த சிறுத்தை குட்டி பசியால் கத்திக்கொண்டே இருந்தது. உடனடியாக அந்த சிறுத்தை குட்டிக்குச் சுங்க இலாகா அதிகாரிகள் பாட்டில் மூலம் பால் வழங்கினர்.

இது குறித்து  காஜாமொய்தீனிடம் நடத்திய விசாரணையில், சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். சென்னையில் ஒருவர் சிறுத்தை குட்டி கேட்டதால் வாங்கி வந்ததாகவும், பார்ப்பதற்குப் பூனை போல் உள்ளதால் அதை வளர்ப்பு பிராணி என நினைத்து அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கருதியதாகவும் அவர் கூறினார்.

siruthai

சிறுத்தை குட்டியை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அது பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி என்பதும், 1 கிலோ 100 கிராம் எடைகொண்டது என்பதும் தெரிந்தது. இதையடுத்து மேல் நடவடிக்கைக்காகச் சிறுத்தை குட்டி மற்றும் அதை விமானத்தில் கடத்தி வந்த காஜாமொய்தீனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனச்சட்டத்தின் கீழ் காஜாமொய்தீன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சிறுத்தை குட்டியை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திரும்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.