தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கடந்த 12 நாட்களில் 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கடந்த 12 நாட்களில் 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கடந்த 12 நாட்களில் மட்டும் 50 லட்சம் பக்தர்கள் நீராடி புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆற்றினை வழிபாடு செய்தனர்.

நெல்லை மற்றும்  துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா கடந்த 12 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வந்தது .பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 143 படித்துறைகள் பக்தர்கள் நீராடுவதற்கு அமைக்கப்பட்டு அதில் ஏராளமான பக்தர்கள் நீராடி தங்களது ஆன்மீக கடமைகளை நிறைவேற்றினர். 

pushakaramhj

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வந்தது.இதனைஅடுத்து தாமிர பரணியில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடைபெற்று வந்தது.

 ஆன்மீக அமைப்புகள் பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிர பரணிக்கு சிறப்பு வழிபாடுகள், வேள்விகள், யாகங்கள், கலை நிகழ்ச்சிகள், மாலையில் மகா ஆரத்தி நடைபெற்று வந்தது . அதனையடுத்து மூன்று வேளை அன்ன தானமும் வழங்கப் பட்டு வந்தது.

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற‌ மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

இதனால் தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது .கடந்த 4 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

pusahkaravila

விழாவில் உச்சக்கட்டமாக நேற்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசனம் செய்தனர்.

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.

pusahkaravila

குருஸ்தலமான தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

புஷ்கர விழா நிறைவு நாள் என்பதால் இன்று மதியம் பாபநாசத்தில் மகா ஆரத்தி விழா நடைபெற  உள்ளது. அதனையடுத்து சாத்தயதி பூஜை நடைபெற உள்ளது. 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் இன்று மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது.

இதனால் இந்த பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டிருந்தனர்.ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதி வழங்கினர்.