தலை விரித்தாடும் செல்ஃபி மோகம்; உ.பியில் விபத்துக்குள்ளான விமானத்துடன் செல்ஃபி எடுத்த மக்கள்

 

தலை விரித்தாடும் செல்ஃபி மோகம்; உ.பியில் விபத்துக்குள்ளான விமானத்துடன் செல்ஃபி எடுத்த மக்கள்

உத்தரபிரதேசத்தில் விபத்திற்குள்ளான விமானத்துடன் மக்கள் செல்ஃபி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ: உத்தரபிரதேசத்தில் விபத்திற்குள்ளான விமானத்துடன் மக்கள் செல்ஃபி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் அனைவரும் செல்ஃபி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதனால் மிகப்பெரிய இழப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சந்தோஷமான சமயங்களில் செல்ஃபி எடுக்கப்பட்ட நிலை சென்று தற்போது இறப்பு, விபத்து போன்ற துக்கமான நிகழ்வுகளிலும் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஒருதரப்பினர் கடுமையான எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர். ஆனாலும் துக்க நிகழ்வுகளில் எடுக்கப்படும் செல்ஃபிக்கள் குறைந்ததாக தெரியவில்லை.

அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டது. அப்போது விவசாய நிலத்தில் மோதி அந்த விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த மூன்று பேரும் உயிர் தப்பினர். விமானம் விபத்துக்குள்ளான தகவல் வெளியானதை  அடுத்துஅப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.  

விரைந்து சென்ற மக்கள் விபத்தில் சிக்கியுள்ள விமானம் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதா? என எதை பற்றியும் யோசிக்காமல் விபத்துக்குள்ளான விமானத்துடன் செல்ஃபிக்களை எடுத்தனர். இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது போன்ற செல்ஃபி மோகத்தால் சமூகம் இரக்கமற்றதாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.