தலைவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

 

தலைவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். அவர்களின் வாழ்த்துகள் பின்வருமாறு.

palanis

எடப்பாடி பழனிசாமி (அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்):

இறைமகன் இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் அன்புச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏழைகளையும், எளிய மனத்தோரையும், கைவிடப்பட்டோரையும் ‘‘இறைவனின் பிள்ளைகள் நீங்கள்’’ என்று வாஞ்சையோடு அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த இயேசு பெருமான், தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார்.

இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில் நாமும் கடைபிடிக்க உறுதி ஏற்போம். அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் வழிபாடு.

கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதோடு புதிதாகப் பிறக்க உள்ள ஆண்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பொங்கிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மகிழ்கிறோம்.

vaikoo

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):

பகையும் வெறுப்பும் வளர்ந்து படுகொலைகளும் பஞ்சமா பாதகங்களும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கக்கூடிய அபாயகரமான சூழல் வளர்ந்து வரும் இன்றைய நிலையில் சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் ரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ் நாட்டுக்கு இன்றியமையாத தேவை ஆகும்.

thiruna

திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்):

சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடந்திடும் நல்லரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட இயேசு கிறிஸ்து அருள் பாலிக்கட்டும்.

உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

doss

ராமதாஸ் (பாமக நிறுவனர்): 

உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். ‘‘தந்தையே இவர்களை மன்னியும்… ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’ என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டால் உலகில் அன்பும், ஆனந்தமும் பொங்கும்.

கிறித்துமஸ் கொண்டாட்டங்களின் திருநாள் ஆகும். அந்த நாளில் மகிழ்ச்சியும், மற்றவர் நலனுக்கான பிரார்த்தனைகளும் தான் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும். அந்த நாளின் தன்மை ஆண்டின் 365 நாட்களுக்கும் நீடித்திருக்க வேண்டும்; நாட்டில் அமைதி நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில்  அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

vasan

ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்):

த.மா.கா என்றும் கிறிஸ்தவ மக்களின் தோழனாக, அரணாக, பாதுகாவலராக இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் எளிய நடையையும், நற்பண்புகளையும் பின்பற்றி வருகின்ற கிறிஸ்தவ சமுதாய மக்கள் எல்லோரும் அவரின் நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து நல்வாழ்க்கை வாழவும், வாழ்வில் முன்னேற்றம் காணவும், நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இறைவன் துணை நிற்க வேண்டி, கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.