தலையில்லாமல் கிடந்த தலித் சிறுமியின் சடலம்; மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

 

தலையில்லாமல் கிடந்த தலித் சிறுமியின் சடலம்; மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

பள்ளி சென்ற தலித் சிறுமி தலையில்லாமல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

போபால்: பள்ளி சென்ற தலித் சிறுமி தலையில்லாமல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் பேலாகேடி கிராமத்தை சேர்ந்த 12 வயது தலித் சிறுமி, அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியில் நடைபெற்று வரும் ஆண்டு தேர்வை எழுதுவதற்காக கடந்த புதன்கிழமை சென்ற சிறுமி நெடு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மிகுந்த பதட்டத்துடன் மறுநாள் மதியம் பண்டாவில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி  வந்த நிலையில், அன்றைய தினம் மாலையில் சிறுமியின் உடலை அவரது கிராமத்தின் அருகில் மீட்டுள்ளனர். பின்னர், அவரது துண்டிக்கப்பட்ட தலையை அங்கிருந்து 50-100 மீட்டர் தூரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.

சிறுமியின் உடலை மீட்ட போலீசார் அதனை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சாகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் வியாஸ் கூறுகையில், முதற்கட்ட ஆய்வில் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தெரிகிறது. எனினும், பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதையும் தெளிவாக கூற முடியும். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

அதேசமயம், குற்றவாளி அதே கிராமத்தில் தான் இருக்கிறார் என கூறியுள்ள சிறுமியின் பெற்றோர், அவருடன் தங்களுக்கு நில பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.