தற்கொலை செய்துகொண்ட மருத்துவரின் கடிதம் கிழிக்கப்பட்டதா?

 

தற்கொலை செய்துகொண்ட மருத்துவரின் கடிதம் கிழிக்கப்பட்டதா?

பாயல் தற்கொலை செய்தி தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அவருடைய அறைக்கு வந்த அந்த குற்றவாளி மாணவிகள் மூவரும் தற்கொலை கடிதத்தை கிழித்துபோட்டிருக்கக்கூடும் என்று இப்போது காவல்துறை சந்தேகிக்கிறது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், அல்லது மிகப்பெரிய மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகமாகிக்கொண்டே வருகிறது. சிலர் ஜாதிய ரீதியிலான தாக்குதல்களாலும், சிலர் அழுத்தும் பாடச்சுமையாலும் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்கதை. கடந்த மே 22ஆம் தேதி மும்பை டாப்பிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துவந்த டாக்டர் பாயல் தற்கொலை செய்துகொண்டதை நமது தளத்தில் விரிவாக பதிவு செய்திருந்தோம். பாயலை சாதிய ரீதியாக சிறுமைப்படுத்திவந்த மூன்று மருத்துவ மாணவிகள் சிறையில் அடைக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். இப்போது வழக்கில் இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

3 Accused doctors

டாக்டர் பாயல் தற்கொலை செய்துகொண்டாலும், அதற்கான காரணம் என்னவென்று அவர் கைப்படி எழுதிய கடிதமோ பதிவுகளோ எதுவும் அப்போது காவல்துறை வசம் சிக்கவில்லை. ஆனால், குற்றம் நடந்து கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப்பிறகு, காவல்துறையினர் டாக்டர் பாயலின் செல்போன் பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்திருக்கின்றனர். அதில், தன் தற்கொலைக்கு காரணத்தை ஒரு கடிதமாக எழுதி, அதனை ஒரு போட்டோவாகவும் எடுத்துவைத்துவிட்டு இறந்திருக்கிறார். பாயல் தற்கொலை செய்தி தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அவருடைய அறைக்கு வந்த அந்த குற்றவாளி மாணவிகள் மூவரும் தற்கொலை கடிதத்தை கிழித்துபோட்டிருக்கக்கூடும் என்று இப்போது காவல்துறை சந்தேகிக்கிறது. தன் கடைசி கடிதத்தை இவர்கள் ஏதேனும் செய்யக்கூடும் என்று தெரிந்து, அதனை போட்டோவாக எடுத்துவைத்துவிட்டு இறந்திருக்கிறார் பாயல்.அங்கிதா, ஹேமா, மற்றும் பாக்தி ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது!