தற்காலிக ஆசிரியர்கள் இன்று பணி நியமனம் இல்லை – பள்ளி கல்வித்துறை திடீர் முடிவு

 

தற்காலிக ஆசிரியர்கள் இன்று பணி நியமனம் இல்லை – பள்ளி கல்வித்துறை திடீர் முடிவு

தற்காலிக ஆசிரியர்கள் இன்று பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் இன்று பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. அது அரசின் பொறுப்பு என கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிடில் திங்கள்கிழமை (இன்று) முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் இன்று பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் திரும்பி வருவதற்காக இன்று மாலை வரை காத்திருக்க திட்டமிட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆசிரியர்கள் பணிக்கு வரும் போது சங்கத்தினர் தடுத்தால் ஆசிரியர்கள் முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தொலைபேசியில் புகார் அளிக்கலாம். புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவு செய்ய கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதி செய்து பணியில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.