தற்காலிக ஆசிரியர்களை நியமிப்போம் என்ற அரசின் கருத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

 

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்போம் என்ற அரசின் கருத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திட, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திட, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. அது அரசின் பொறுப்பு என கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்பாவிடில் திங்கள்கிழமை முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், ஐந்தாவது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரை நேரில் அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

அதேபோல், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.