தற்காலிக ஆசிரியர்களால் மீண்டும் பிரச்னை: உயர் நீதிமன்ற கிளை கருத்து

 

தற்காலிக ஆசிரியர்களால் மீண்டும் பிரச்னை: உயர் நீதிமன்ற கிளை கருத்து

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் மீண்டும் பிரச்னை தான் வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது

மதுரை: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் மீண்டும் பிரச்னை தான் வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யபட்டும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிடில் திங்கள்கிழமை (இன்று) முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், ஆசிரியர்களின் போராட்டம் 7-வது நாளாக இன்றும் தொடர்கிறது. அதேசமயம், தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. மேலும், இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு தஹ்டை கோரி லாகனாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் மீண்டும் பிரச்னை தான் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

சட்டரீதியாக போராடாமல் ஏன் தெருவில் இறங்கி போராடுகிறீர்கள் என ஜாக்டோ ஜியோவுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் ஏற்கத்தக்கதல்ல. சட்டப்போராட்டம் நடத்தாமல் எதற்கெடுத்தாலும் தெருவுக்கு வந்து போராடுவது சரியல்ல. இதுகுறித்து தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அரசின் நிதி நிலை தொடர்பான விஷயம் என்பதால் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ள நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர்களை நியமித்தால் அவர்கள் தங்களை நிரந்த ஆசிரியர்களாக மாற்ற சொல்லி போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புண்டு எனவும் தெரிவித்துள்ளது.