தருமபுரி பழங்குடியின சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்; மருத்துவர்களுக்கு எதிராக விசாரணை!

 

தருமபுரி பழங்குடியின சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்; மருத்துவர்களுக்கு எதிராக விசாரணை!

நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை இயற்கை உபாதைக்காக வெளியில் சென்ற மாணவியை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்

சென்னை: தருமபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்தது தொடர்பாக அரசு மருத்துவர்களை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி பாப்பிரெட்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள அரசு விடுதியில் தங்கி பயின்ற மாணவி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து, நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை இயற்கை உபாதைக்காக வெளியில் சென்ற மாணவியை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

dharmapuri rape

இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளான மாணவி, வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூற அவர்கள், கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்களது புகாரை ஏற்க காவல்துறையினர் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையமான 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மாணவியின் உறவினர்கள் புகார் அளித்த பின்னர் மறுநாள் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

dharmapuri rape

இதையடுத்து, உள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு பரிசோதனை செய்யப்பட்டு, குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு, மாணவியின் உடல்நிலை மோசமானதால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நவம்பர் மாதம் 10-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்தது தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்களை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் கீழ் இயங்கும் மாநில அமைப்பான தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவர் செந்தில் கூறுகையில், துறை சார்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், எங்களிடம் அரசு புகார் அளித்துள்ளது. நாங்களும் தனியாக அவர்களது லைசன்ஸ் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளோம். எதாவது தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

doctor

மருத்துவமனையில் மாணவி உயிரிழந்த பின்னர் மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், மாணவிக்கு தலைசுற்றல் மற்றும் தள்ளாட்டம் அல்லது தசை கட்டுப்பாடு இல்லாமை இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாணவியை காப்பாற்ற இயலவில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி குறிப்பிடவில்லை. மேலும், போலீசார் விசாரணைக்கு மருத்துவர்கள் அளித்த விவரக் குறிப்பிலும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டத்தை மருத்துவர்கள் குறிப்பிடவில்லை.

அதேசமயம், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவரத்தை அவரது காப்பக வார்டன் அளித்த பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிககியில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில்,  எஃப்.ஐ.ஆர்.-ல் போலீசார் பாலியல் குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளனர்.