தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ராஜினாமா; விஷால் மீது குற்றச்சாட்டு

 

தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ராஜினாமா; விஷால் மீது குற்றச்சாட்டு

நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்

சென்னை: நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் உள்ளார். இவரது தலைமையிலான நிர்வாகிகள் மீது சில மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் பணத்தை தராமல் நிறுத்திவைத்து அவர்களை கஷ்டப்படுத்துவது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

அது தவிர, திரையரங்குகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களான க்யூப் மற்றும் யு.எப்.ஓ நிறுவனங்களை நீக்குவது, திரைப்படங்களை திரையிட அதிக தொகை கொடுக்க வேண்டிய சூழல், படம் ஹிட்டானாலும் முழு பலன்கள் தயாரிப்பாளர்களுக்கு சென்றடையாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், தயாரிப்பாளர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை பிரச்னையும் மேலோங்கி உள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சிறு பட தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும், அவர்கள் வளர்ச்சிக்காகவும் சங்க தலைவர் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இருவரும் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஒட்டு மொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுகளும், ஓரிரு நிர்வாகிகளால் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டி செயற்குழு உறுப்பினர் பதவியை தேனப்பன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.