தமிழ் மொழியில் தேர்வை நடத்தாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி! | திணறும் ஆசிரியர் தேர்வு வாரியம்

 

தமிழ் மொழியில் தேர்வை நடத்தாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி! | திணறும் ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழகத்தில் தாமரை மலரவே மலராத சூழல் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் தமிழிசை தெலுங்கானா பக்கம் ஒதுங்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே மீம்கள் வலம் வர துவங்கிவிட்டன. அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை இந்தி வாலாக்கள் நிறைந்த மாநிலமாக மாற்றும் முயற்சியும் நடைப்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே டெலிபோன் ஆபரேட்டர்களில் ஆரம்பித்து, வங்கிகள், மின் வாரியம், ரயில்வே துறைகளில் ‘தமிழ் நஹி மாலும்’ வார்த்தைகள் நிறையவே உச்சரிக்கப்படுகின்றன.
சென்ற வாரம் தமிழில் எழுதப்பட்டிருந்த பணம் எடுக்கும் ஸ்லிப்பை வைத்துக் கொண்டு ஒரு அப்பத்தா தேசிய வங்கி ஒன்றில் தடுமாறிக் கொண்டிருந்தது. பானி பூரி கணக்காக உப்பலாக இருந்த அதிகாரி ஒருவர், அப்பத்தாவிற்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் செல்லான் நிரப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

exam

நிற்க… விஷயம் அதுவெல்லாம் கிடையாது… தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடாத நிலையில், ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழ் வழி கல்வி பயின்ற 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

teachers selection board

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பாணையில் தெரிவிக்காமல், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக செப்டம்பர் 6ஆம் தேதி பதில் அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.