தமிழ் பேசும் இளைஞர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

தமிழ் பேசும் இளைஞர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஹைதராபாத்: தமிழ் பேசும் இளைஞர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தின் எதிரொலியாக ஆபாசம், தீவிரவாதம், சர்ச்சைக்குரிய கருத்துகள், வீடியோக்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குவதற்காக சுமார் 20 ஆயிரம் பணியாளர்களை 2018-ஆம் ஆண்டுக்குள் வேலைக்கு அமர்த்த இருப்பதாக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உறுதி அளித்திருந்தார்.

இதையடுத்து ஏற்கனவே 5,000 ஊழியர்களை பேஸ்புக் நிறுவனம் பணியில் நியமித்து விட்டது. மீதியுள்ள பணியாளர்களையும் வேலைக்கு எடுப்பதில் பேஸ்புக் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக 50 மொழிகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க அந்தந்த மொழிகளை சார்ந்த இளைஞர்களை வேலைக்கு எடுக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் ஆபாசம், தீவிரவாதம், சர்ச்சைக்குரிய கருத்துகள், வீடியோக்களை நீக்கும் பணியை செய்வதற்கு இந்திய இளைஞர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வேலை வாய்ப்பை தருகிறது. இந்தப் பணியில் தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் பேசும் இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஜென்பேக்ட் நிறுவனத்தில் நேர்முக தேர்வு நடக்கிறது.