தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்!

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான அணி நிர்வாகத்துக்கு வந்தது. அப்போது திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீடுக்கு குழு என பல வாக்குறுதிகளை அளித்தது.

ஆனால், அதன்படி இந்த நிர்வாகம் செயல்படவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் பல முக்கிய விஷயங்களில் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

vishal

சென்னை டி.நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு, விஷாலுக்கு எதிரணியிலுள்ளவர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கதையெல்லாம் சில மாதங்களுக்கு முன்னர் அரங்கேறின. மேலும், இளையராஜா நிகழ்ச்சியின் போது, அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்றபின் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், சங்க நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் மற்றும் பொது குழு நடத்த கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

producers council

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில்,  ஆண்டுதோறும் பொதுக்குழுவை கூட்டாதது, ஆவணங்களை பராமரிக்காதது, சங்க நிதியை தவறாக பயன்படுத்தியது ஏன் என பல கேள்விகளை கேட்டு அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.