தமிழ், தமிழர் என பேசி பிரதமர் உசுப்பேத்துகிறார் – சீமான் 

 

தமிழ், தமிழர் என பேசி பிரதமர் உசுப்பேத்துகிறார் – சீமான் 

தமிழை ஆட்சி மொழியாக கொண்டுவந்தால் மட்டுமே வாழும். இதை செய்ய தவறினால் பிரதமரின் பேச்சுக்கள் தமிழர்களை உசுப்பேத்தும் செயலாகிவிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை காமராஜர் நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழை முன்னிறுத்தி பிரதமர் பேசுவது எங்களுக்கு பெருமை அதற்கு பாராட்டுக்கள். தமிழை ஆட்சி மொழியாகவும், வழக்காடும் மொழியாகவும் ஆக்கும்பொழுது தான் தமிழ் வாழும். நாட்டின் வளங்களில் மிகவும் அடிப்படையான முதன்மையானது அறிவு வளம் கல்வி வளம். அதை புரிந்து கொண்டு கல்வி நிலையங்களை திறந்து கல்வி கற்க வாய்ப்பு தந்தவர் காந்தியடிகள். எந்த பதவி இருந்தாலும் அந்த பதவிக்கு பெருமை சேர்த்தவர். அவர் நினைவை போற்றும் இந்நாளில் தூய்மையான அரசியலை கட்டி எழுப்புவோம். 

seeman

கீழடியில் ஆய்வை மேற்கொள்கிற அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.  2 ஏக்கரிலேயே ஆய்வு செய்கிறீர்கள் மொத்த நிலபரப்பையும் ஆய்வு செய்ய வேண்டும். முழுமையான கீழடி ஆய்வை 100 ஏக்கரில் செய்ய வேண்டும் . அதே போல் ஆதிச்ச நல்லூரிலும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். திராவிடர் தான் தமிழர் என்றால் ஏன் அது தமிழர் நாகரீகமாக இருக்க கூடாது. தமிழ் புத்தாண்டை ஏன் திராவிட புத்தாண்டு என அழைப்பதில்லை. மோடி பல இடங்களில் தமிழை மேற்கோள் காட்டுவது எங்களுக்கு பெருமை. தமிழ் ஆட்சி மொழியாக கொண்டுவந்தால் மட்டுமே வாழும். சமஸ்கிருத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு கொடுப்பதில்லை. இதெல்லாம் செய்ய தவறினால் பிரதமரின் இந்த பேச்சுக்கள் தமிழர்களை உசுப்பேத்தும் செயல் ஆகும் ” என்று கூறினார்.