தமிழ் சினிமாவின் கிளாஸிக் ரொமான்ஸ்: திரையில் மாயம் செய்த விஜய் சேதுபதி-த்ரிஷா!

 

தமிழ் சினிமாவின் கிளாஸிக் ரொமான்ஸ்: திரையில் மாயம் செய்த விஜய் சேதுபதி-த்ரிஷா!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘96’ திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

சென்னை: விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘96’ திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த பெரும்பாலான விமர்சகர்கள், பொருமையாக எடுக்கப்பட்டுள்ள நல்ல காதல் கதை நிச்சயம் இது ரசிகர்களை கவரும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

96

தமிழ் சினிமாவில் எதார்த்த காதலை கூறிய சேரனின் ‘ஆட்டோகிராப்’ பாணியில் பள்ளிப்பருவ காதலை நீண்ட இடைவெளிக்குப் பின் நினைத்து பார்த்து உணரும் வகையில் ‘96’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதுபோன்ற படங்களில் ஹீரோவின் வாழ்க்கையை மட்டுமே பேசி வரும் ட்ரெண்டை இயக்குநர் பிரேம்குமார் சற்று வித்தியாசமாக ஹீரோயினின் வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

க்ளாஸ்மேட்ஸின் ரீயூனியனில் 22 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் ராம்(விஜய் சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (த்ரிஷா) இடையிலான சொல்லப்படாத காதலும், மலரும் பள்ளிக்கால நினைவுகளும், தற்போது இவர்களது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி டிரேவல் ஃபோட்டோகிராபராக நடித்துள்ளார்.

96

இப்படம் குறித்து விமர்சகர்கள் சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

எதார்த்தமான காதலை கமர்சியலுக்காக எந்த ஒரு பதார்த்தத்தையும் சேர்க்காமல், சீன்களிலும், மியூசிக்கிலும், பார்வையிலும் கண்ணியத்துடன் காதலை கையாளப்பட்டுள்ளது. காதல்/ரொமான்ஸ் தான் உங்கள் சாய்ஸ் எனில் இந்த படம் நிச்சயம் உங்களது ஆழ்மனதை அசைக்கும்.

காதல் கொஞ்சல்களையும், வலியையும் இசையில் ஊற்றி புதிய மாயத்தை இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா நிகழ்த்தியுள்ளார். இந்த படத்தில் சுமார் 6 பாடல்களை பாடிய சின்மயிக்கு தேசிய விருது கன்ஃபார்ம்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பால் வசீகரம் செய்பவர். ஒவ்வொரு முறையும் அதனை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கூடுதலாக வசீகரிக்கிறார். சவுத் குயீனாக அறியப்படும் த்ரிஷா எவ்வித கடுமையான மேக்கப்பும் இல்லாமல் சட்டிலாக தனது கதாபாத்திரத்தில் நிறைந்திருக்கிறார். ஜெஸ்ஸி மாதிரி இல்ல இந்த ஜானு வேற மாதிரி..

எந்த ஒரு நெருக்கமான காதல் காட்சிகள் இல்லாமல், காதலின் வலியையும், மகிழ்ச்சியையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொள்ளும் கண்ணியமான காதலர்கள் நம்மையும் காதலில் விழச் செய்கின்றனர். ’ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டதில்லை, சின்ன சின்ன விஷயங்களுக்கு முட்டிக் கொண்டதில்லை, ஆனாலும் இவர்கள் காதலர்கள்.. தமிழ் சினிமாவில் தனித்துவமான காதல் டிராக்கை இந்த படம் உருவாக்கியுள்ளது.

இரண்டே கதாபாத்திரத்தை வைத்து படத்தின் இரண்டாம் பாதியை அமைத்திருப்பது பாராட்டத்தக்கது. சினிமாவுக்காக எதையும் சேர்க்காமல் கதையின் உண்மை தன்மையை ஆழமாக கூறியுள்ள இப்படத்தின் முடிவு, பள்ளிப்பருவ காதல் நிஜ வாழ்வில் இருக்குமோ அதை காட்டியுள்ளது. இப்படத்தை பார்க்கும் எல்லோருக்கும் தங்களது பள்ளிப்பருவ காதல் குறித்த அழகான நினைவுகள் வந்துபோகும்..

குறைக்கூற எதுவும் இல்லை. சிறந்த நடிப்பும் சிறந்த திரைக்கதையும் ஒன்று சேரும் போது தான் இத்தனை நிறைவு கிடைக்கும். 96 படத்தில் அது நிகழ்ந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படம் வரும் அக்.4ம் தேதி திரைக்கு வருகிறது.