தமிழக முதலமைச்சர் ஆகும் ஆசை துளியும் இல்லை: அன்புமணி ராமதாஸ் அதிரடி!

 

தமிழக முதலமைச்சர் ஆகும் ஆசை துளியும் இல்லை: அன்புமணி ராமதாஸ் அதிரடி!

தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்ற ஆசை தனக்கு துளியும் இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம்: தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்ற ஆசை தனக்கு துளியும் இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ரெட்டிப்பட்டியில், கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் ‘அன்புமணியை கேள்வி கேளுங்கள்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், “அடுத்த தேர்தல் பற்றி யோசிக்காமல் அடுத்த தலைமுறை பற்றி யோசிக்கும் தலைவராக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். எனக்குத் தமிழக முதலமைச்சர் ஆகும் ஆசை இல்லை. கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஒருவேளை முதல்வரானால், ஒரு குண்டூசியை கூட மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கமாட்டேன். அதற்குப் பதிலாக கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை இலவசமாகக் கொடுப்பேன்” என பேசியுள்ளார்.

மேலும், மதுவிலக்கு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி மது குடிப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

anbumani

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக, 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. பாமகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என முக்கிய கட்சிகள் அனைத்தும் தூதுவிட்டதாக அப்போதே செய்திகள் வெளியானது. ஆனால், தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.    

இந்நிலையில், தனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை இல்லை என்றும், கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்திருப்பது அரசியல் பிரமுகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.