தமிழக மின்சார துறையில் 2500 கோடி மெகா ஊழல் அம்பலம்: ஆதாரத்தை வெளியிட்ட அறப்போர் இயக்கம்!

 

தமிழக மின்சார துறையில் 2500 கோடி மெகா ஊழல் அம்பலம்: ஆதாரத்தை வெளியிட்ட அறப்போர் இயக்கம்!

தமிழக மின்சாரத்துறையில் 2500 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. 

சென்னை: தமிழக மின்சாரத்துறையில் 2500 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. 

மின்சாரத்துறையில் நிலக்கரி இறக்குமதியில் சுமார் 2500 கோடி  ஊழல் நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் கூறியுள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயராமன், ‘ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரை ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் மெட்ரிக் டன் முதல் 35 மெட்ரிக் டன் வரை நிலக்கரி விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலக்கரிக்கு நிலக்கரி இறக்குமதி கூலி மற்றும் அதன் மீதான வரியாக ஒப்பந்ததாரர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டிய பணம் ரூ 239.56 கோடி மட்டுமே.

ஆனால் ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்பரேஷன் லிமிடெட் நிலக்கரி இறக்குமதி கூலியாக ரூ 1267.6 கோடி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டியதாக கூறி நமது மின்சார வாரியத்திடமிருந்து ரூ 1267.6 கோடி பெற்றுள்ளார். கொள்முதல் ஆணை படி துறைமுகத்தில் கட்டிய ரசீதையே வாங்காமல் ஒப்பந்ததாரரும் மின்சார வாரியத்தின் தலைமை அதிகாரிகளும் மோசடி செய்து ரூ 1028 கோடி (ரூ 1267.6 கோடி – ரூ 239.56 கோடி) பணத்தை சுருட்டியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

“ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரை மட்டுமே ரூ 1028 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது 2001 முதல் கணக்கு செய்தால், இவ்வாறு செய்த மோசடி குறைந்தபட்சம் ரூ 2500 கோடியை தாண்டும். இந்த ஊழல் 2016 ம் ஆண்டு Tariff for Major Ports ல் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கும் மின்சார வாரியத்திற்கும் Thermal piece rate levy குறித்து நடந்த வேறொரு வழக்கில் ஆதாரங்கள் வெளிவந்துள்ளது.

அந்த வழக்கில் மின்சார வாரியம் நிலக்கரி இறக்குவதற்காக ஒப்பந்ததாரர் மூலமாக துறைமுகத்திற்கு ரூ 1267.6 கோடி கட்டியதாக தெரிவித்தது. விசாகப்பட்டினம் துறைமுகம் நிலக்கரி இறக்கிய முழுக்கூலியையும் ஒப்பந்ததாரர் செலுத்திவிட்டார் என்றும் அது மொத்தமே ரூ 239.56 கோடி தான் என்றும் தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ள அறப்போர் இயக்கம்,

“இந்த ஊழல் குறித்து மின்சார வாரியத்தின் தணிக்கை பிரிவும் மத்திய அரசின் தணிக்கை பிரிவும் (CAG) எழுப்பிய கேள்விகளையும் ஆதாரமாக இணைத்துள்ளோம். இதை உடனடியாக விசாரித்து, இதில் பங்குள்ள அனைத்து பொது ஊழியர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை திரும்ப மீட்டு, அந்த நிறுவனத்தை உடனடியாக டெண்டர் வேலை செய்வதில் இருந்து தடை செய்யவும் கோரி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியுள்ளோம். இந்த ஊழல் குறித்து மின்சார வாரியமும் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது